கன்னியாகுமரியில் நிகழ்ந்த கோர விபத்தில் தனது தாய், தந்தையை இழந்த பள்ளிச் சிறுவனான மோகனவேல் (மாஸ்டர் திஹான்), தனது தாத்தாவின் அரவணைப்பில் கர்நாடக மாநிலத்தில் வளர்ந்து வருகிறான். இந்திய தேசியக் கொடி அதிகாரப்பூர்வமாகத் தயாரிக்கப்படும் இடமான கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகேயுள்ள பெங்கேரி கிராமத்தில், தேசியக் கொடி தயாரிக்கும் பணியில் அந்தத் தாத்தா பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். தாம் உருவாக்கும் அந்தத் தேசியக் கொடி, டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதியால் ஏற்றப்பட்டுப் பட்டொளி வீசிப் பறப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்பது அந்தத் தாத்தாவின் வாழ்நாள் கனவாக இருக்கிறது.
இந்நிலையில், டெல்லி செல்லத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், தாத்தா எதிர்பாராதவிதமாக உடல்நலம் குன்றிப் படுத்த படுக்கையாகி விடுகிறார். இதனால் தனது ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ எனத் தாத்தா ஏங்குவதைக் காணும் சிறுவன் மோகனவேல், தாத்தாவின் அந்தப் புனிதமான கனவைத் தான் நேரில் சென்று நிறைவேற்ற முடிவு செய்கிறான். யாரும் அறியாமல் தனி ஆளாக டெல்லியை நோக்கித் தனது சாகசப் பயணத்தைத் தொடங்குகிறான்.
கர்நாடகாவில் தொடங்கும் அவனது இந்த நீண்ட பயணம் கேரளா, மும்பை, உத்தரப் பிரதேசம், காஷ்மீர் எனப் பாரதத்தின் பல மாநிலங்களைக் கடந்து செல்கிறது. வழியெங்கும் பல புதிய மனிதர்களையும், பல்வேறு கலாச்சாரங்களையும் சந்திக்கும் அந்தச் சிறுவன், எதிர்பாராத பலவிதமான தடைகளையும், ஆபத்தான தீவிரவாத அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. இறுதியில், அத்தனை சவால்களையும், ஆபத்துகளையும் தனியொரு சிறுவனாகத் தாண்டிச் சென்று, டெல்லி செங்கோட்டையில் பறக்கும் தேசியக் கொடியை நேரில் பார்த்துத் தன் தாத்தாவின் வாழ்நாள் கனவை நிறைவேற்றினானா இல்லையா என்பதே ஆழமான நாட்டுப்பற்றுடன் உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஃப்ளாக்’ (FLAG) படத்தின் உணர்வுபூர்வமான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘ஃப்ளாக்’ – தாத்தாவின் கனவு!
மதிப்பீடு : 3.5 / 5
நடிகர்கள் : மாஸ்டர் திஹான், கிரி துவாரகேஷ், மிக்கி மக்கிஜா, ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா
இசை : ராஜா ரவி வர்மா மற்றும் பாலசுப்பிரமணியம்
ஒளிப்பதிவு & இயக்கம் : எஸ்.பி. பொன்சங்கர்
தணிக்கை சான்றிதழ் : U
மக்கள் தொடர்பு (PRO) : ஆனந்த்
