பி எப் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் ராஜன் தயாரிப்பில் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் ஃப்ரெட்ரிக் ஜான், ஐரா பாலக் , சாந்தினி தமிழரசன், மோனா பெட்ரே, ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சாத்தான் – தி டார்க்’.
அஸ்தினாபுரம் என்ற மலை கிராமத்தில் வசிக்கும் நாயகி ஐரா அம்மா மோன பத்ரே, மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அம்மா மோன பத்ரே தன் உடலை தானே காயப்படுத்திக்கொள்வதுடன் விசித்திரமாக நடந்துக் கொள்கிறார்.
இதை பார்க்கும் மகள் ஐரா அவரை வெளியே செல்லாத அளவிற்கு வீட்டில் வைத்து பூட்டி வைக்கிறார். இதே சமயம் ஊரில் பலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனையடுத்து இந்த வழக்கை போலீஸ் தீவிரமாக விசாரிக்கிறது.
இதே வேளையில் ஐரா கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். உண்மையை தெரிந்துக் கொள்ள ஐராவுடன் படிக்கும் நாயகன் ஃப்ரெட்ரிக் ஜான், ஐரா வீட்டிற்கு நண்பனுடன் செல்கிறார். அங்கு சென்றதுடன் இருவரும் வீட்டிற்குள் இருக்கும் மர்மமான உருவத்திடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
இறுதியில் நாயகன் ஃப்ரெட்ரிக் ஜான், ஐரா வீட்டில் இருந்து உயிருடன் வெளியே வந்தாரா? இல்லையா? இந்த தொடர் கொலைக்கான காரணம் என்ன? என்பதை போலீஸ் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே ‘சாத்தான் – தி டார்க்’ படத்தின் மீதிக்கதை.
பள்ளி மாணவராக நடித்திருக்கும் ஃப்ரெட்ரிக் ஜான் துணிச்சலான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
பள்ளி மாணவியாக நடித்திருக்கும் ஐரா சவாலான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பால் கவர்கிறார்.குறிப்பாக அம்மாவிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிகள் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது.
ஐராவின் அம்மாவாக நடித்திருக்கும் மோன பத்ரே, பார்வையாலே மிரட்டுகிறார். படத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை சாந்தினி தமிழரசன் கொடுத்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் எட்வர்ட் ராஜன் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் அஷ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. பாலா ஜி.ராமசாமி, ஒளிப்பதிவு கதை நகர்விற்கு துணை நிற்கிறது.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சாத்தான் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு அமானுஷ்ய மோதலை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் இத்திரைப்படத்தில் அமானுஷ்யம், தொடர்கொலை, மர்மங்கள் , விசாரணை என அனைத்தும் கலந்து ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சாத்தான் – தி டார்க்’ – அமானுஷ்யம்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ஃப்ரெட்ரிக் ஜான், ஐரா பாலக் , சாந்தினி தமிழரசன், மோனா பெட்ரே, ஸ்ரீஜா ரவி
இசை : அஸ்வின் கிருஷ்ணா
இயக்கம் : மணிகண்டன் ராமலிங்கம்
மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்