லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், ஜி கே எம் தமிழ்க் குமரன், பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், யோகிபாபு, மிஸ்கின், சாண்டி மாஸ்டர் , ஜி கே எம் தமிழ்க் குமரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பரிமளா அண்ட் கோ’
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராம், ஊர்வசி தம்பதிகளின் மூத்த மகள் சஞ்சனா , இளைய மகள் அனந்திகா ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மற்றும் போதைப்பொருள் விற்கும் சாண்டி , அனந்திகாவைக் காதலிப்பதாகச் சொல்லி தொல்லை கொடுக்கிறார். இது மட்டும் இல்லாமல் இவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தொல்லை கொடுத்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் சாண்டியின் தொல்லையை தாங்கிக் கொள்ள முடியாத ஜெயராம் குடும்பத்தினர் சாண்டியை கொலை செய்ய நினைக்கிறார்கள். மறுநாள் காலையில் சாண்டி திடீர் என கொலை செய்யப்படுகிறார். இதனையடுத்து இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் மிஸ்கின் தீவிரமாக விசாரிக்கிறார்.
மறுபக்கம் சாண்டியின் அம்மா காயத்ரி மகனை கொன்றவனை தேடி வருகிறார், இதே வேளையில் சாண்டியின் நண்பன் கொலை செய்யப்படுகிறார். இவரைத் தொடர்ந்து சாண்டியின் அம்மா காயத்ரியும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
இந்நிலையில் ஜெயராம் குடும்பத்திற்கு மர்ம நபரிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் சாண்டியை கொலை செய்திருக்கிறார் என்று அதில் எழுதியிருக்கிறது. இதை பார்த்து ஜெயராம் குடும்பம் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இறுதியில் சாண்டியை கொலை செய்தது யார்? எதற்காக ? சாண்டியின் கொலைக்கும் ஜெயராம் குடும்பத்திற்கும் சம்மந்தம் உண்டா ? இல்லையா ? என்பதே ’பரிமளா அண்ட் கோ’ படத்தின் மீதிக்கதை.
பரிமளா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். சாண்டியின் கொலையில் மனைவி , மகள்கள் மீது சந்தேகம் கொண்டு அதை விசாரிக்கும் முறை சிரிக்கும் வகையில் இருக்கிறது.
ஜெயராம் மனைவியாக நடித்திருக்கும் ஊர்வசி தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக கொலை குறித்து மிஸ்கின் விசாரிக்கும் இடத்தில் இவரது டைமிங் காமெடி பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
ஜெயராம் மூத்தமகளாக வரும் சஞ்சனா மற்றும் இளைய மகளாக வரும் அனந்திகா ஆகியோர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகிபாபு வழக்கமான காமெடியில் கலக்கியிருக்கிறார். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மிஸ்கின் கொலை குறித்து விசாரிக்கும் முறை ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. படம் அடுத்த கட்டத்திற்கு நகர துணை நிற்கிறார்.
சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜி கே எம் தமிழ்க் குமரன் , ரௌடியாக வரும் சாண்டி , சாண்டி அம்மாவாக வரும் காயத்ரி , சென்ராயன் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பாக்ஸன் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
ரௌடி கொலை அதனால் பாதிக்கப்படும் குடும்பபத்தை மைய கருவாக வைத்து சஸ்பென்ஸ், திரில்லர், காமெடி என அனைத்தையும் கலந்து ஒரு சுவாரஸ்யமாக திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். இயக்குநர் பாண்டிராஜ் இத்திரைப்படத்தில் போதை பழக்கத்தால் மாணவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பம் எந்தெந்த வகையில் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். போதை இல்லாத நகராக இருக்க எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் எடுத்து சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’பரிமளா அண்ட் கோ’ – சமூக பொறுப்பு
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், யோகிபாபு, மிஸ்கின்
இசை : பாக்ஸன்
இயக்கம் : பாண்டிராஜ்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
