பிற்படுத்தப்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த நாயகன் சிங்காரம் (யோகி பாபு), தனது தாய் (தீபா சங்கர்), தந்தை (எம்.எஸ். பாஸ்கர்), சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த எளிய குடும்பத்திற்கு, கிராமத்தில் அனைவரும் மதிக்கும் பெரியவரான வேல ராமமூர்த்தி ஆதரவாக அரணாக நிற்கிறார்.
சக மனிதர்களாகக்கூட மதிக்கப்படாமல், தங்கள் சமூகம் எதிர்கொள்ளும் தொடர் அவமானங்களாலும், அடையாளமற்ற புறக்கணிப்புகளாலும் மனமுடையும் தந்தை எம்.எஸ். பாஸ்கர், ஒரு கட்டத்தில் விரக்தியின் விளிம்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்தத் துயரமான சூழ்நிலையில், எம்.எஸ். பாஸ்கர் ஏற்கனவே வாங்கியிருந்த லாட்டரி சீட்டின் மூலம் யோகி பாபுவிற்குப் பெருமளவு பணம்கிடைத்து, ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறுகிறார்.
பணம் வந்த பிறகும் தன் உறவினர்களைக் கைவிடாமல், அவர்களுக்கு ஒரு வசதியான வாழ்வை யோகி பாபு ஏற்படுத்தித் தருகிறார். ஆயினும், சமூகம் அவர்கள் மீது காட்டும் சாதிய பாகுபாடும் தீண்டாமையும் மட்டும் முழுமையாக மாறவில்லை என்பதை உணர்கிறார். தனக்குக் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, கிராம மக்களின் போக்குவரத்து வசதி முதல் பள்ளி கல்வி வரை பல நற்பணிகளைச் செய்கிறார் யோகி பாபு. பணத்தால் தனக்குக் கிடைத்த அங்கீகாரமும் மரியாதையும், தன் சமூகம் சார்ந்த அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.
இந்தச் சூழலில், அந்தத் தொகுதிக்கான சட்டமன்றத் (MLA) தேர்தல் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் இரு வேறு முன்னணி கட்சிகளின் வேட்பாளர்களான மாரிமுத்து மற்றும் படவா கோபி ஆகியோரை எதிர்த்து, ஒரு சுயேச்சை வேட்பாளராக யோகி பாபு களம் இறங்குகிறார். இறுதியில், கிராம மக்களின் பேராதரவோடு யோகி பாபு தேர்தலில் வெற்றி பெற்றாரா? ஒடுக்கப்பட்ட தன் சமூகத்தினருக்குச் சேர வேண்டிய அடையாளத்தையும், சுயமரியாதையையும் அவரால் மீட்டெடுக்க முடிந்ததா? என்பதே ‘சிங்காரம்’ படத்தின் நெஞ்சைத் தொடும் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘சிங்காரம்’ – அடையாளப் போராட்டம்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள்: யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, மரியா வின்சென்ட், மாரிமுத்து, படவா கோபி, தீபா சங்கர், மனோபாலா, செண்ட்ராயன், ஆர்த்தி கணேஷ், கல்கி, டி.எஸ்.ஆர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர்
இசை : சாம் சி.எஸ்
இயக்கம் : கே.வி. கதிர்வேலு
தணிக்கை சான்றிதழ் : U
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத் ,பரஸ் அஹ்மத்
