888 புரொடக்ஷன் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரிப்பில் மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் சரத்குமார் ,இந்திரஜித் ஜெகஜித்,தேவிகா சதீஷ், வையாபுரி ,ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆழி’ .
நாகர்கோவிலில் வசிக்கும் சரத்குமார் மீன்பிடி படகு மெக்கானிக்காக இருக்கிறார். இதைத் தவிர போதைப் பொருள் விற்பது மற்றும் ஆயுதம் கடத்தல் ஆகிய சட்ட விரோதமான வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், தன்னுடன் படிக்கும் மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார்.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித் மற்றும் தேவிகாவின் காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. இதனால் கோபம் கொள்ளும் சரத்குமார் இந்திரஜித் ஜெகஜித்தை ஆழ்கடல்ளுக்குள் கடத்திச் செல்கிறார்.
ஆழ்கடலில் படகில் வைத்து இந்திரஜித்தை கொலை செய்ய சரத்குமார் நினைக்கிறார். இதில் எதிர்பாராத வகையில் படகில் இருக்கும் மோட்டாரில் சரத்குமார் கால் மாட்டிக்கொள்கிறது.
இறுதியில் இந்திரஜித் ஜெகஜித் சரத்குமாரை காப்பாற்றினாரா? இல்லையா? படகில் இருந்து இந்திரஜித் ஜெகஜித் தப்பித்தாரா ? இல்லையா? சரத்குமார் மகள் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே ’ஆழி’ படத்தின் மீதிக்கதை.
தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் ஒருபக்கம் பாசக்கார அப்பாவாகவும் மறுபக்கம் கொடூரமான குணம் கொண்ட வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் வேறுபட்ட நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது அனுபவ துடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
அறிமுக நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித், புதியவர் போல இல்லாமல் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஏழை மாணவரனாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலி அப்பாவால் தான் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் உயிருக்கு ஒரு ஆபத்து என்றதும் அவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் கண்கலங்க வைக்கிறது.
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், அழகாக இருப்பதோடு அளவான நடிப்பின் முலம் கவனம் பெறுகிறார் . கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
பத்திரிக்கையாளராக நடித்திருக்கும் நிகில் முருகன், நாயகன் அப்பாவாக வரும் வையாபுரி, போலீசாக வரும் பிர்லா போஸ், நாயகன் அம்மாவாக வரும் தாமரை செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை . வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. ஆனந்த் என்.நாயர் ஒளிப்பதிவில் ஆழ்கடலின் அழகையும் அதில் இருக்கும் ஆபத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
காதல் , காதலை கொலை செய்ய நினைக்கும் காதலின் அப்பா ,காதலியின் அப்பாவை ஆபத்தில் இருந்தது காப்பாற்ற நினைக்கும் காதலன் இவைகளை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இத்திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை படகில் நடுக்கடலில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் போராட்டத்தை விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ’ஆழி’ ஆழ்கடல் போராட்டம்
மதிப்பீடு : 2.75/5
நடிகர்கள் : சரத்குமார் ,இந்திரஜித் ஜெகஜித், தேவிகா சதீஷ், வையாபுரி ,ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி
இசை : ஜாஸி கிப்ட்
இயக்கம் : மாதவ் ரமா தாசன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்