கார் மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் நாயகன் வெற்றி, தனது தந்தை லிவிங்ஸ்டன், தாய் துளசி மற்றும் தங்கையுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே, நாயகி பிரியலயாவுடன் வெற்றிக்குக் காதலும் மலர்கிறது.
மறுபுறம், தலைமுடி ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டுள்ள வெங்கடேஷின் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிகிறார் லிவிங்ஸ்டன். இதே வேளையில், திரையரங்க உரிமையாளரான அருள் டி. சங்கர், காவல்துறையின் மறைமுக ஆதரவுடன் தனது அடியாட்களை வைத்து சட்டவிரோதக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இச்சூழலில், ஆந்திராவின் திருப்பதியிலிருந்து சுமார் ₹5 கோடி மதிப்புள்ள தலைமுடி சரக்குகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிப் புறப்படும் லிவிங்ஸ்டன், பயணத்தின் நடுவே மர்மமான முறையில் மாயமாகிறார்.
லாரியுடன் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கும் மாயமானதால், ஓட்டுநர் லிவிங்ஸ்டன் மீது சந்தேகமடையும் உரிமையாளர் வெங்கடேஷ், அவர் மீது திருட்டுப் பழியைச் சுமத்துகிறார். அத்துடன், காணாமல் போன லாரியையும் சரக்கையும் மீட்டுத் தருமாறு காவல்துறை அதிகாரி அபிராமி வெங்கடாச்சலத்திடம் புகார் அளிக்கிறார்.
வழக்கைத் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கும் அபிராமி வெங்கடாச்சலம், வெற்றியை அழைத்துத் தனது தந்தை குறித்து விசாரிக்கிறார். தந்தையின் நிலை குறித்து மனமுடைந்து தவிக்கும் வெற்றி, தன் தந்தையின் மீதான திருட்டுப் பழியைத் துடைத்து, அவரைப் பத்திரமாக மீட்டு வரத் தனக்கான பாணியில் அதிரடியாகக் களமிறங்குகிறார்.
இறுதியில், கடத்தல் கும்பலின் பிடியிலிருந்து தனது தந்தை லிவிங்ஸ்டனை வெற்றி மீட்டாரா? ‘கருப்புத் தங்கம்’ என அழைக்கப்படும் ₹5 கோடி மதிப்பிலான தலைமுடி லாரியைக் கடத்திய உண்மையான குற்றவாளிகள் யார்? என்பதே ‘பிளாக் கோல்டு’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘பிளாக் கோல்டு’ – புதிய களம்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : வெற்றி, பிரியலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாச்சலம், அருள் டி. சங்கர், ஏ. வெங்கடேஷ், நிழல்கள் ரவி, ராமர், துளசி, சபிதா ராய்
இசை : கவாஸ்கர் அவினாஷ்
இயக்கம் : தீரன் அருண்குமார்
தணிக்கை சான்றிதழ் : U/A (UA 16+)
மக்கள் தொடர்பு (PRO) : “AIM” சதீஷ்
