டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி, பகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நடராஜ், தமன் எஸ் ,நிகாரிக்கா, சின்னி ஜெயந்த்,ரக்சன், டிராவிட் ,ஏஞ்சலின் அஞ்சுகுரியன், சுதாகர் , யாஷாஸ்ரீ ,ஜொனிதா காந்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’இதயம் முரளி’.
அமெரிக்காவில் வசித்து வரும் அதர்வாவின் திருமண ஏற்பாடுகளை அவரது மாமா நட்டி தீவிரமாக செய்து வருகிறார். திருமணத்திற்கு முந்தைய நாள், தனது நண்பர்களுடன் விமானத்தில் இந்தியா திரும்பும் அதர்வா, அதே விமானத்தில் பயணிக்கும் பகத் பாசிலை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். இருவரும் உரையாடத் தொடங்க, தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதையை பகத் பாசிலிடம் அதர்வா சொல்லத் தொடங்குகிறார்.
திருச்சியில் பள்ளிப் பருவத்தில் டியூஷனில் ப்ரீத்தி முகுந்தனை முதன்முதலாகப் பார்க்கும் அதர்வா, அவர்மீது காதல் கொள்கிறார். டியூஷன் சென்டர், டென்னிஸ் மைதானம் என ப்ரீத்தி செல்லும் இடமெல்லாம் அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து, தனது காதலை மனதிற்குள் வளர்த்துக் கொண்டே இருக்கிறார்.
ஒருநாள், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அதர்வாவை வீட்டிற்கு அழைக்கிறார் ப்ரீத்தி. அங்கு சென்று தனது காதலை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கும் அதர்வாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. ப்ரீத்தி இரட்டைப் பிறவி சகோதரிகளில் ஒருவர் என்பதும், இருவரும் ஒரே மாதிரி தோற்றமளிப்பதால் தான் காதலித்தது யாரை என்றே தெரியாமல் குழப்பமடைகிறார். அந்தக் குழப்பத்தில் சொல்ல நினைத்த காதலை சொல்லமாலேயே அங்கிருந்து செல்கிறார்.
பின்னர் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் அதர்வா, மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் கயாடு லோஹரைப் பார்த்ததும் மீண்டும் காதலில் விழுகிறார். அவருடன் நட்பாகப் பேசி, நெருக்கமாகப் பழகினாலும், தனது மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் துணிச்சல் மட்டும் வரவில்லை.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும், கயாடு தனது சொந்த ஊருக்குப் புறப்படுகிறார். அவரை வழியனுப்புவதற்காக ரயில் நிலையத்துக்குச் செல்லும் அதர்வா, இந்த முறையாவது தனது காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று உறுதியுடன் செல்கிறார். ஆனால் அந்தத் தருணத்திலும் அவரது தயக்கமே வெற்றி பெறுகிறது. காதலை மனதிற்குள் பூட்டி வைத்தபடியே கயாடுவை வழியனுப்பி வைக்கிறார்.
இறுதியில் நாயகன் அதர்வா மாமா நட்டி பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்தாரா ? இல்லையா ? பகத் பாசில் திருணத்தை நிறுத்தினரா ? இல்லையா ? என்பதே ’இதயம் முரளி’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அதர்வா முரளி, தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், இளைஞர் என கதையின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு தனது தோற்றம், உடை அலங்காரம், ஸ்டைல் என அனைத்திலும் மாறுபட்டு, புதிய கோணத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் தங்களது தோற்றம் மற்றும் இயல்பான வெளிப்பாடுகளால் கவனம் ஈர்க்கிறார்கள். அதிகமான வசனங்களோ, மிகைப்படுத்தப்பட்ட நடிப்போ இல்லாமல், பார்வை, புன்னகை, கண் சிமிட்டல் போன்ற நுணுக்கமான வெளிப்பாடுகள் மூலம் காதல் காட்சிகளின் அழகியலை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள்.
அதர்வாவின் மாமாவாக நடித்திருக்கும் நட்டி நடராஜின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பகத் பாசில், தமன் எஸ்., நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா உள்ளிட்ட படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பால் காட்சிகளை ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கின்றன.
இசையமைப்பாளர் தமன். எஸ் இசையில் உருவான அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமையாகவும் மனதை கவரும் வகையிலும் அமைந்துள்ளன. குறிப்பாக, அவரது பின்னணி இசை கதையின் ஓட்டத்துடன் இணைந்து பயணித்து, காட்சிகளின் உணர்வை மேலும் உயர்த்துகிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு பிரமாண்டமாகவும் அழகிய காட்சியமைப்புகளுடனும் அமைந்துள்ளது.
நாயகனின் பல காதல் தோல்விகளையும், அவற்றின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.
இத்திரைப்படத்தில் காதல் தோல்விகளை மட்டும் பதிவு செய்யாமல், காதலை வெளிப்படுத்தாமல் இருப்பதால் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் சிக்கல்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். காதல், பாசம், நட்பு, நகைச்சுவை என அனைத்தையும் சரியான அளவில் கலந்து, ரசிக்கக்கூடிய படைப்பாக வழங்கிய இயக்குநருக்கு பாராட்டுகள்.
மொத்தத்தில் ’இதயம் முரளி’ – இதயத்தை தொடும்
மதிப்பீடு : 3.30/5
நடிகர்கள் : அதர்வா முரளி, பகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நடராஜ்
இசை : தமன். எஸ்
இயக்கம் : ஆகாஷ் பாஸ்கரன்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)
