மதுரை அரசு மருத்துவமனையின் டீனாக (Dean) பொறுப்பு வகிக்கும் டாக்டர் எஸ். ராஜா, கார்ப்பரேட் மயமாகிவிட்ட மருத்துவ உலகில் ஏழை எளிய மக்களுக்கு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் இலவசச் சேவை செய்யும் ஒரு நேர்மையான அதிகாரி. மறுபுறம், அவரது மனைவியான டாக்டர் தர்ஷினி ரெட்டியோ, வங்கிக் கடன் பெற்று பெண்களுக்கு எனத் தனியாக ஒரு சொகுசு மருத்துவமனை தொடங்கி, வரும் நோயாளிகளிடம் சிகிச்சை என்ற பெயரில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் வணிக நோக்கம் கொண்டவர். மனைவியின் மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய நோயாளிகளின் நிலையைப் பார்த்து உருகும் ராஜா, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து மனிதநேயத்துடன் உரியச் சிகிச்சை அளிக்கிறார்.
இதற்கிடையில், மருத்துவக் கல்லூரியில் பயிலும் ராஜாவின் மகன் குரு விஜய், பெரும் தொழிலதிபரான சிதம்பரம் PDK-வின் மகள் தபிதா குணரத்னேவை காதலிக்கிறார். அதே நேரத்தில், சிதம்பரத்தின் சட்டவிரோத மருந்து கிடங்குகளுக்கு அரசு அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைக்கின்றனர்.
மருத்துவமனை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வரும் ராஜா, அனைத்துப் பணியாளர்களும் பயோ-மெட்ரிக் முறைப்படி சரியான நேரத்திற்கு வர வேண்டும் என உத்தரவிடுகிறார். இதனால், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தாமதமாக வரும் அமைச்சரின் உறவினரான ஒரு மருத்துவரையும், செவிலியர்களின் அத்துமீறல்களையும் கடுமையாகக் கண்டிக்கிறார்.
நேர்மையின் அடையாளமாக இருக்கும் ராஜாவால் தங்களின் சுயநல பிசினஸ் பாதிக்கப்படுவதை உணரும் அவரது மனைவி தர்ஷினி ரெட்டி, ஊழல் அமைச்சர் மற்றும் தொழிலதிபர் சிதம்பரம் PDK ஆகிய மூவரும் கைகோர்த்து, ராஜாவின் பதவியைப் பறித்து அவரை மதுரையை விட்டே விரட்ட ஒரு பெரும் சதித் திட்டத்தைத் தீட்டுகின்றனர்.
இந்த அதிகாரப் போட்டி உச்சத்தில் இருக்கும்போது, எதிர்பாராத விதமாகக் கொரோனா போன்ற ஒரு மர்மத் தொற்றுநோய் பரவத் தொடங்குகிறது. இதனால் ஒட்டுமொத்த நகரமும் ஊரடங்கில் முடங்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்மக் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் குவிகின்றனர்.
இந்த இக்கட்டான பேரிடர் காலத்தில், எதிரிகளின் அரசியல் சதிவலைகளில் இருந்து டாக்டர் ராஜா எவ்வாறு தப்பினார்? தன்னிடம் தஞ்சமடைந்த ஏழை மக்களின் உயிர்களைக் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ‘செய் செய்யாதே’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘செய் செய்யாதே’ – சமூகச் சிந்தனை
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள்:டாக்டர் எஸ். ராஜா, குரு விஜய், தபிதா குணரத்னே, ஹெச். ராஜா (சிறப்புத் தோற்றம்), தர்ஷினி ரெட்டி, மோனிகா ப்ரீத்தி V., பிரதீக்ஷா மனோ பிரசாந்த், சிதம்பரம் PDK
இசை : டாக்டர் எஸ். ராஜா
இயக்கம் :டாக்டர் எஸ். ராஜா
தணிக்கை சான்றிதழ் :U/A
மக்கள் தொடர்பு : பி. சிவக்குமார் , ஏ. ராஜா
