தமிழக – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கடம்புழா காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் அர்ஜுன் தாஸ். எல்லைப் பகுதியில் அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் ஒன்று அருகிலுள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. அந்தக் காரிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்படுகிறது.
இது குறித்துத் தீவிர விசாரணையில் இறங்கும் கேரள காவல்துறை அதிகாரி அர்ஜுன் தாஸ், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அந்தச் சிறுவனின் மரணம் தற்செயலான விபத்து அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதைக் கண்டறிகிறார்.
மறுபுறம், துபாயில் வசித்து வந்த ஸ்ரிஷ்டி.ஒய், தனது மகள் ஜாரா வினீத் சந்தோக் மற்றும் மகன் நீரவ்.எஸ் ஆகியோருடன் தமிழகத்தின் மலைக் கிராமமான குறிஞ்சி மேட்டிற்குக் குடியேறுகிறார். ஒருநாள் இரவு, அக்கா ஜாராவுடன் ஐஸ்கிரீம் சாப்பிடச் செல்லும் சிறுவன் நீரவ் மர்மமான முறையில் காணாமல் போகிறான்.
எங்கு தேடியும் மகன் கிடைக்காததால், குறிஞ்சி மேடு காவல் நிலைய அதிகாரி சஞ்சனா நடராஜனிடம் தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு ஸ்ரிஷ்டி.ஒய் புகார் அளிக்கிறார். இதற்கிடையில், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சிறுவன் ஒருவன் காணாமல் போன சம்பவத்திற்கும், தற்போது கேரளாவில் நடந்த சிறுவன் கொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில், அர்ஜுன் தாஸ் தமிழகத்தின் குறிஞ்சி மேடு காவல் நிலையத்திற்கு வருகிறார்.
இச்சூழலில், சாலையோரத்தில் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுவன் நீரவ் மீட்கப்படுகிறான். குறிஞ்சி மேடு காவல் நிலைய அதிகாரி சஞ்சனா நடராஜனைச் சந்திக்கும் அர்ஜுன் தாஸுக்கு, கேரளாவில் நடந்த கொலை வழக்கின் புலனாய்வில் சஞ்சனா முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்.
ஒரு கட்டத்தில், ஸ்ரிஷ்டி.ஒய்யின் வீட்டில் சிறுவன் நீரவ் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடையும் அர்ஜுன் தாஸ், இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியிலும் ஒரு சைக்கோ கொலையாளி இருப்பதைத் தனது புலனாய்வின் மூலம் கண்டுபிடிக்கிறார்.
இறுதியில், சிறுவர்களைக் கடத்தி காருடன் ஏரியில் கவிழ்த்துக் கொலை செய்யும் அந்த மர்மக் கொலையாளி யார் என்பதை அர்ஜுன் தாஸ் கண்டுபிடித்தாரா? எதற்காகச் சிறுவர்களை மட்டுமே குறிவைத்து அந்த நபர் இந்தக் கொலைகளைச் செய்கிறார்? என்பதே ‘ஜான் டோ’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
மொத்தத்தில் ‘ஜான் டோ’ – மர்ம முடிச்சு
மதிப்பீடு : 3.5 / 5
நடிகர்கள் : அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ரிஷ்டி.ஒய், ஜாரா வினீத் சந்தோக், நீரவ்.எஸ், விஜே அர்ச்சனா சந்தோக், படவா கோபி, கார்த்திக் குமார், அனுபமா குமார்
இசை : முஜீப் மஜீத்
இயக்கம் : மதுமிதா
தணிக்கை சான்றிதழ் : U/A
மக்கள் தொடர்பு (PRO) : யுவராஜ்
