பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாரி 2’ இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் வெளியானதுமே ‘இன்ஸ்டன்ட்’ ஹிட் ஆனது. படம் வெளிவந்த பின் அந்தப் பாடல் தாறுமாறான ஹிட்டானது.
யு டியூபில் வெளியான அந்த வீடியோ பாடல் சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்தது. தினமும் பல லட்சம் பார்வைகளுடன் வெகு சீக்கிரத்தில் 1 கோடியைக் கடந்து 18 நாட்களில் 10 கோடி பார்வைகளைத் தொட்டுள்ளது.
தமிழ் சினிமா பாடல்களில் யு டியுபில் முதல் முறையாக 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ள முதல் பாடல் என்ற பெருமையை இந்தப் பாடல் பெற்றுள்ளது. இதற்கு முன்பு ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் 9 கோடிகளைக் கடந்து முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையே நேற்று ஒரே நாளில் முறியடித்து இன்று 10 கோடி சாதனையைப் புரிந்திருக்கிறது ‘ரௌடி பேபி’.
இந்தப் பாடலில் இடம் பெற்ற இசையும், வரிகளும், பாடியவர்களின் குரல்களும், நடன அமைப்பும், தனுஷ், சாய் பல்லவி இருவரின் அசத்தலான நடனமும் மொழி வித்தியாசம் இல்லாமல் பல மொழி ரசிகர்கள், வெளிநாட்டு ரசிகர்கள் ஆகியோரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்த 10 கோடி சாதனை மேலும், மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் சப்டைட்டிலுடன், 4கே தரத்தில் பாடலை யு டியூபில் சேர்த்துள்ளார்கள்.
Leave a Reply