Uyir Kodu Kaveri Album launch event held Prasad Lab, Chennai. V. Gowthaman, producer Suresh Kamakshi, Indira Projects Bhupesh Nagarajan, actor Harish kumar, Abhi saravanan, Mime Gopi, director and cinematographer BG Muthiah, Sabarimala, Kambam Gunaji, and farmers participated in the Event.

மூத்த நடிகர்களின் ரசிகர்கள் தான் போராட்டங்களை விமர்சிக்கிறார்கள்” ; ‘காவிரி’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமட்சி பரபரப்பு பேச்சு…!

இருட்டு அறையில் முரட்டு குத்து’க்கு எதிராக போராடுவதுதான் பாரதிராஜாவின் வேலையா..? ‘காவிரி’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமட்சி ஆவேசம்..!

“மணல் அள்ளும் ஸ்லீப்பர்செல்கள் யார்” ; ‘காவிரி’ ஆல்பம் மூலம் உண்மையை உடைத்த இயக்குனர் ராகேஷ்..!

“யார் தலைவர் என தெரியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்” ; அபிசரவணன் ஆதங்கம்..!

“போராட்டங்களை திசைதிருப்புவதன் பின்னணியில் சென்சார் போர்டு” ; இயக்குனர் மீரா கதிரவன் பகீர் குற்றச்சாட்டு..!

காவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..!

“விவசாயிகள் லாபம் பெற இளைஞர்கள் உதவிக்கரம் நீட்டவேண்டும்” ; இந்திரா புராடக்ட்ஸ் பூபேஷ் நாகராஜன்..!

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து ‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ பாடல் ஒன்றை. உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பமாக. இந்திராஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன் ஆதரவுடன் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட இயக்குனர்கள் வ.கௌதமன், மீரா கதிரவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன், நடிகர்கள் அரீஷ்குமார், அபிசரவணன், மைம் கோபி, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் சமூக ஆர்வலர்களான சபரிமாலா, கம்பம் குணாஜி, விவசாயிகள் தரப்பிலிருந்து ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை விவசாயி செல்வமணி உள்ளிட்ட சில விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

இந்த ஆல்பத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ் பேசும்போது, “தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளில் பயணிக்கும்போது ஒருகாலத்தில் அங்கே பசுமையாக இருந்த நிலங்கள் இன்று வறண்டுபோய் கிடப்பதை பார்க்கும்போது, அந்தப்பகுதியில் பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையில் ரொம்பவும் வருத்தப்பட்டேன். இப்போதும் கூட அங்கே மண் அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஹெலிகேம் வைத்து படமாக்கும்போது அதை கல்லெறிந்து உடைத்தார்கள், ஸ்லீப்பர் செல்போல அந்தப்பகுதியில் சிலர் இருக்கிறார்கள். இதை யாருக்காக செய்கிறோம் என அவர்களுக்கு தெரியவில்லை.. ஆனால் தாங்கள் செய்வது தப்பு என அவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. காவிரிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அது கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறிவிட்டது, விவசாயிகளின் வலி, வேதனையை இந்த ஆல்பத்தில் பதிவு செய்துள்ளோம்” என்றார்.

நடிகர் அபிசரவணன் பேசும்போது, “நீட் தேர்வை எதிர்த்தோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியோ நம்மை பாதிக்கும் எந்த ஒரு விஷயம் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையே சிலர் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். அவர்களும் நம்முடனேயே இருப்பவர்கள் தான். அப்படியானால் இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்த நம்மை எது பிரிக்கிறது..? இதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.. ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுதவரும் நம் பிள்ளைகள் சிரமப்பட்டுவிட கூடாது என்பதற்காக அங்குள்ள தமிழ் உணர்வாளர்களுடன் சேர்ந்து உதவி செய்ய காத்திருந்தோம்.. ஆனால் ஒருவர் கூட வரவில்லை.. வந்தவர்கள் எல்லாம் வசதியானவர்கள்.. விமானத்தில் தேர்வெழுத வந்தவர்கள்.. அப்படியானால் ராஜஸ்தானில் தேர்வெழுத சென்ற தமிழர்கள் சிரமப்படுகிறார்கள் என தவறான தகவல்களை யார் எதற்காக பரப்புகிறார்கள்..? எங்களை திடீர் போராளிகள் போல சித்தரிக்கிறார்கள், போராடவில்லை என்றாலும் தயவுசெய்து எங்களை காயப்படுத்தாதீர்கள் இன்றுவரை யார் தலைவர் என்றே தெரியாமல் தானே போராடிக்கொண்டு இருக்கிறோம், அழைப்பவர்கள் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறோம்” என்றார்.

அரபுநாட்டில் வசிக்கும் சமூக போராளியும், டெல்லியில் விவசாயிகள் போராடியபோது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக பின்புலமாக இருந்து உதவி செய்தவருமான ரசூல் பேசும்போது, “அரபு நாடுகளில் பீட்சா, சவர்மா என பாஸ்ட் புட்களைத்தான் சாப்பிடுகின்றனர்.. ஒருகாலத்தில் அங்கேயும் விவசாயம் இருந்தது.. அவர்களும் நம்மைப்போல உணவை சாப்பிட்டவர்கள் தான்.. விவசாயம் அழிந்துபோனதால் இப்போது பாஸ்ட்புட்டுக்கு வந்துவிட்டது நிலைமை.. எதிர்காலத்தில் நமக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிட கூடாது” என கூறினார்.

நடிகர் அரீஷ்குமார் பேசும்போது, “காவிரியில் தண்ணீரை நிறுத்திவிட்டால், நிலத்தை தரிசாக்கிவிட்டால் இங்கே தாங்கள் நினைத்ததை சுலபமாக நடத்திவிடலாம் என்றுதான் திட்டமிட்டு நம்மை நசுக்கி வருகிறார்கள், கல்வியிலும் கூட நாம் முன்னேறிவிட கூடாது என நீட் தேர்வை கொண்டுவந்து நசுக்குகிறார்கள், இரண்டு நாடுகளுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் பகிர்ந்துகொள்ள முடியும்போது, இரண்டு மாநிலங்களுக்குள் சண்டை எதற்காக வந்தது..?” என கேள்வி எழுப்பினார்.

இந்திரா புராஜெக்ட்ஸ் பூபேஷ் நாகராஜன் பேசும்போது, “விவசாயிகளுக்காக போராடுகிறோம் என சொல்கிறார்கள்.. இங்கே விவசாயிகளுக்கு உள்ள ஒரே பிரச்சனை பொருளாதார பிரச்சனை தான். விவசாயிகளுக்கு அவர்கள் பொருட்களை மதிப்பு கூட்டல் செய்து விற்கமுடியவில்லை. இன்றைய இளைஞர்கள் இணையதள உதவியுடன் மார்க்கெட்டிங் உத்தியை பயன்படுத்தி விவசாயிகளுக்கு உதவுங்கள். அனைவரையும் உங்களை தேடி வரவழையுங்கள்.. கர்நாடகாவில் அணியே கட்டியிருக்கவில்லை என்றால் நாம் என்ன செய்திருப்போம்.. நாம் ஏன் தண்ணீரை சேமித்து வைக்கும் முயற்சியை எடுக்கவில்லை. நாம் கேள்விகேட்க வேண்டியது இதை செய்ய தவறியவர்களைத்தான்.. எந்த ஒரு பேக்டரியும் முப்பது சதவீதத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பை வழங்கிவிடமுடியாது.. விவசாயம் மட்டும் தான் எழுபது சதவீதம் வேலைவாய்ப்பை தருகிறது.. உணர்ச்சிகரமாக பேசுவது இடையூறாக இருக்க கூடாது.. இளைஞர்களுக்காக இருக்கவேண்டும்:” என்றார்.

இயக்குனர் மீரா கதிரவன் பேசும்போது, “மூன்று படங்களை இயக்கிவிட்ட ராகேஷ் நினைத்திருந்தால், எங்கேயாவது இருட்டு அறையில் முரட்டு குத்து குத்தி ஒரு படத்தை எடுத்து காசு பார்க்க கிளம்பியிருக்கலாம். ஆனால் அவர் காவிரி நீரை பற்றி படம் எடுக்க முன்வந்ததற்காக அவருக்கு தலைவணங்குகிறேன்.. ஜல்லிக்கட்டு, காவிரி, நீட் தேர்வு என ஒருபக்கம் இளைஞர்கள் போராட, இன்னொரு பக்கம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை கொண்டாடுவதும் நம் இளைஞர்கள் தான், இங்கே உளவியல் ரீதியான சிக்கல் இருக்கிறது. அதை சரிசெய்யவேண்டும், இங்கே சென்சார் அமைப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என் படங்களில் சின்ன விஷயங்களில் கூட பெரிய அளவில் ஆட்சேபனை தெரிவித்த சென்சார் போர்டு, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு எந்த சிக்கலும் இல்லாமல் எப்படி சான்றிதழ் கொடுத்தார்கள்.. இதற்குப்பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது.. இதுபோன்ற படங்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை போராட்ட களங்களில் இருந்து திசைதிருப்ப மறைமுகமாக முயற்சிகிறார்கள். இயற்கை வளங்களை சுரண்டி எடுப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக மாற்றும் அவலம் இங்கேதான் நடக்கிறது, தமிழ் இனத்தின் மீது மிகப்பெரிய போர் தொடுக்கப்பட்டு இருக்கிறது. உடை என்பது நமக்கு பெரிய ஆயுதம்.. கருப்பு சட்டையை கண்டால் அலறுகிறார்களே, அதனால் தான், காவிரியை நாம் நிச்சயமாக மீட்டுக்கொண்டு வந்துவிடுவோம், ஆனால் மீட்டபின் அதை தக்கவைக்கும் முயற்சி என்ன என்பதுதான் கேள்விக்குறி. இங்கிருந்து அள்ளப்படும் மணல் எல்லாம். நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்குத்தான் போகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. இதில் மிகப்பெரிய அரசியல் சூதாட்டம் நடக்கிறது” என தனது குமுறலை கொட்டினார்.

தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது. “சமீபத்தில் காவிரிக்காக போராட்டம் நடத்தினோம், எல்லோரும் காவிரிக்காக எதற்கு ஐ.பி.எல்லை நிறுத்த சொல்கிறீர்கள் என கேட்கிறார்கள்.. நடிகை ஸ்ரீபிரியா. சேப்பாக்கம் மைதானத்தின் முன்பாக போராட்டம் நடத்தியதற்கு பதிலாக தலைமை செயலகம் முன்பு நடத்தியிருக்கலாமே என்கிறார். எங்கே போராட்டம் நடத்தினால் கவனம் ஈர்க்கப்படுமோ அங்கேதான் போராட வேண்டும்.. உங்களிடம் ஆட்கள் இருக்கிறார்களே.. நீங்கள் சென்று போராட்டம் நடத்தி இருக்கலாமே.. நாங்கள் தடுக்கவில்லையே.. இதில் நாங்கள் காசுக்காக போராடுகிறோம் என சமீபகாலமாக குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார்கள். இப்படி நம் போராட்டங்களை விமர்சித்து பதிவிடுபவர்கள் யாரென பார்த்தால், மூத்த நடிகர்களின் மூத்த ரசிகர்கள் தான்.. அவர்களுடைய உச்சகட்ட போராட்டமே 120 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய் கொடுத்து வாங்கி பார்ப்பதுதான். அதை தவிர வேறு போராட்டத்தை அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். இவ்வளவு பாலங்கள், நான்கு வழி சாலைகள் அமைக்கும் அரசாங்கம் ஏன் அணைகள் மட்டும் கட்ட முன்வரவேயில்லை..? 5௦ வருஷமாக கர்நாடகாவுடன் போராடியதற்கு பதிலாக பத்து அணைகள் கட்டியிருக்கலாம். மற்ற மாநிலங்களில் மணல் அள்ளி விற்க தடை போட்டு விட்டு இறக்குமதி செய்கிறார்கள்.. ஆனால் இங்கே நம் தமிழ்நாட்டில் தான் மணலை இறக்குமதி செய்யக்கூடாது என கூறி மணல் அள்ள அனுமதித்துள்ளார்கள் என்பது விசித்திரம்.

நீட் தேர்வுக்கு எதிராக பாரதிராஜா குரல் கொடுத்தால், உடனே ஏன் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்திற்கு எதிராக இவர் குரல் கொடுக்கவில்லை என்கிறார்கள்.. அதுவா பாராதிராஜாவின் வேலை..? தயவுசெய்து போராடுபவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.. இல்லையென்றால் நீங்கள் வந்து போராடுங்கள்.. உங்களுக்காகவும் தான் போராடுகிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.. பிரச்சனைகளை பேசுவதை விட தீர்வுகளை பற்றி பேசுவோம்.. இப்போது நாம் போராடவேண்டியது ஏன் அணைகட்டவில்லை என மாநில அரசை எதிர்த்துத்தான்” என உணர்ச்சி பொங்க பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குனர் வ.கௌதமன் பேசியபோது, “நமக்கு சோறு தருபவள் தாய்.. அந்த சோறுக்கு அரிசி தருபவன் விவசாயி. தமது நிலத்தில் விளைந்த பயிர்கள் சிரித்து பார்த்த, தாய்க்கு சமமான நமது விவசாயிகள் அந்த நிலம் நீர்காணாமல் வெடித்துப்போய் கிடப்பதை காண சகிக்காமல் தான் நெஞ்சு வெடித்து இறந்தார்கள். எந்த மரத்தின் நிழலில் படுத்து உறங்கினானோ, அதிலேயே தூக்கிட்டு சாகிறான், இத்தனை சாவுகள் விழுந்தபின்னும் கூட இன்னும் தன்னெழுச்சியாக விவசாயிகளுக்காக போராட முடியவில்லை என்கிற குற்ற உணர்ச்சி இப்போதும் இருக்கிறது.

ஒரு படைப்பாளி என்பவன் எப்போது தனது சமூகத்திற்கு பயன்படும் விதமாக படைப்புகளை உருவாக்குகிறானோ அவன் தான் உண்மையான படைப்பாளி. எங்களுக்கு இந்திய ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை.. சுதந்திரத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி அதிகமாக உயிரை கொடுத்தவர்கள் தமிழர்கள் தான்.. இதை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.. சாகவேண்டும் என்பது என்ன எங்கள் தலைவிதியா..?

கூடங்குளம் அணு உலையை ஏன் கேரளாவில் அனுமதிக்காமல் அடித்து துரத்தினார்கள்.? அவர்கள் மானமுள்ள மலையாளிகள். ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் நம் கதி என்ன ஆகும்..? இந்த உலகம் எப்படி தோன்றியது என்கிற ஆய்வை இந்த பூமித்தாயை வெடிவைத்து தகர்த்து, உலகின் ஆதி இனமான தமிழர்களை அழித்துதான் கண்டறிய வேண்டுமா..? சாகர்மாலா என்கிற மீனவர்களை நசுக்கும் திட்டம் யாரை திருப்திப்படுத்துவதற்காக..? சேதுசமுத்திர திட்டத்தால் ராமர் பாலம் அழியும் என கூறி அதை நிறுத்தினீர்களே. இங்கே நியூட்ரினோவை அமல்படுத்தினால், தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையே தரைமட்டமாகிவிடும்.. காவிரி இயற்கை எங்களுக்கு கொடுத்த கொடை.. அதை ஏன் நாம் விட்டுக்கொடுக்க வேண்டும்..? என தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.