அப்துல் பஷீத் சையத் தயாரிப்பில் அஷ்ரஃப் இயக்கத்தில் அஷ்ரஃப், ஜனனி சாமிநாதன், கருணாகரன், உரியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’போட்டோகிராபர்’.
தொழிலதிபரான ஆடுகளம் நரேன், தனது நிறுவனத்தை மகன் அஷ்ரஃப் நிர்வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், புகைப்படக் கலையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அஷ்ரஃப், அதற்காக சிறிது கால அவகாசம் கேட்டுவிட்டு தனது இலக்கை நோக்கி பயணிக்கிறார்.
வித்தியாசமான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் அஷ்ரஃப், சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் கவனம் செலுத்துபவர். எப்போதும் சானிடைசரை உடன் வைத்திருக்கும் அவரது இந்த பழக்கத்திற்கு, சிறுவயதில் தாயைப் பிரிந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவமே காரணமாக உள்ளது.
நண்பன் கருணாகரன் மூலம் மதிகெட்டான் சோலை அருகிலுள்ள மர்மமான அடர்ந்த காட்டைப் பற்றி அறியும் அஷ்ரஃப், அங்குள்ள அரிய மரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார். ஆனால், அந்தக் காட்டிற்குள் சென்றவர்கள் உயிருடன் திரும்பியதில்லை என்பதை அறிந்த கருணாகரன், அவரைத் தடுக்க முயற்சிக்கிறார். இருப்பினும், தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் அஷ்ரஃப் காட்டுக்குச் செல்ல முடிவு செய்கிறார்.
அஷ்ரஃப், வனக்காவலரையும் மீறி அந்த மர்மமான காட்டிற்குள் நுழைகிறார். அங்கு வித்தியாசமான சத்தங்களும் எதிர்பாராத சம்பவங்களும் அவரை அச்சுறுத்துகின்றன. வெளியேற முயன்றும் மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கே திரும்பி வருவதால், தான் அந்தக் காட்டில் சிக்கிக் கொண்டதை அஷ்ரஃப் உணர்கிறார்.
அந்த மர்மமான காட்டில் சிக்கிக் கொண்ட அஷ்ரஃப் , அங்கிருந்து உயிருடன் மீண்டு வந்தாரா? காட்டிற்குள் உண்மையில் நடப்பது என்ன ? என்பதே ’போட்டோகிராபர்’ படத்தின் மீதிக்கதை.
வீரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஷ்ரஃப், தனது முதல் படத்திலேயே அம்மா பாசம், லட்சியம், கனவு, ஏக்கம் போன்ற பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். அவரது இயல்பான நடிப்பு கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.
நாயகியாக நடித்துள்ள ஜனனி சாமிநாதன், குறைந்த காட்சிகளில் தோன்றினாலும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.
நாயகனின் நண்பராக நடித்துள்ள கருணாகரன், தனது இயல்பான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். மற்றொரு நண்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உறியடி சிவாவும் தனது நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.
நாயகனின் தந்தையாக நடித்துள்ள ஆடுகளம் நரேன், தனது அனுபவம் நிறைந்த நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். நாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள தேவி மகேஷ், அழகான தோற்றத்துடன் அளவான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார்.
இசையமைப்பாளர் ராஜ்குமார் சந்திரசேகரன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கின்றன. ரயீஷ் அஹ்மத்தின் ஒளிப்பதிவு, அடர்ந்த காடுகளின் அழகையும் மர்ம உணர்வையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது.
புகைப்படக் கலைஞர் ஒருவர் அடர்ந்த காட்டில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு வருகிறாரா என்பதை மையமாக வைத்து இயக்குநர் அஷ்ரஃப் உருவாக்கியுள்ள இந்தப் படம், ஆபத்துகள் நிறைந்த பயணக் கதையாக அமைந்துள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி சுவாரஸ்யத்தை தக்க வைத்துள்ளார்.
மொத்தத்தில் ’போட்டோகிராபர்’ – சாகச பயணம்
மதிப்பீடு : 3.3/5
நடிகர்கள் : அஷ்ரஃப், ஜனனி சாமிநாதன், கருணாகரன், உரியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ்
இசை : ராஜ்குமார் சந்திரசேகரன்
இயக்கம் : அஷ்ரஃப்,
மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்
