விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் நாயகன் ஹரிஷ், ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராக வலம் வருகிறார். நண்பர்கள் கல்கி ராஜா மற்றும் அனந்த குமாருடன் இணைந்து, ஊரில் உள்ளவர்களைக் குடிக்க ஊக்கப்படுத்துவதோடு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் போதையிலேயே பொழுதைக்கழிக்கிறார்.
நாயகன் எப்போதும் போதையில் இருந்தாலும், மருத்துவக் கல்லூரி மாணவியான நாயகி தனலட்சுமி அவரைத் தீவிரமாகக் காதலிக்கிறார். தாயார் ரமா எவ்வளவோ முயன்றும் ஹரிஷை திருத்த முடிவதில்லை. இதனிடையே, மதுவுக்கு அடிமையான நண்பன் அனந்த குமாரின் மனைவி இறந்தபோதும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் அனைவரும் மது அருந்தும் அளவுக்குக் குடியில் மூழ்கியிருக்கின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் திடீரென மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. போதைக்கு அடிமையான குடிமகன்கள் மது கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்தச் சூழலில், மனம்மாறும் நாயகன் ஹரிஷ், மதுப்பழக்கத்திலிருந்து விடுபட்டுப் புதிய தொழில் தொடங்கி சமூகத்தில் மரியாதையைப் பெறுகிறார். குடும்பத்திலும் மகிழ்ச்சி திரும்புகிறது.
அப்போது, நாட்டில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளதாக அரசு அறிவிக்கிறது. திருந்தி வாழத் தொடங்கிய ஹரிஷ் மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானாரா? என்பதே ‘நல்ல படம்’ படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘நல்ல படம்’: சமூகப் பொறுப்புடன் எடுக்கப்பட்ட ஒரு நல்ல விழிப்புணர்வுத் திரைப்படம்
மதிப்பீடு : 2.5/5
நடிகர்கள் : டாக்டர் ஏ. ஹரிஷ், தனலட்சுமி, கல்கி ராஜா, அனந்த குமார், மொட்ட ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி
இயக்கம்: C. பிரபுராம்
இசை: சகிஷ்ணா சேவியர்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
