பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

2011 – 2018ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். 2011ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றபின் இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன. அதன்பின் 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபோதும் விருது அறிவிப்புகள் வெளியிடப்படாமல் இருந்தன. இந்த நிலையில், 2011 முதல் 2018 வரை எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தமாக 201 பேருக்கு அறிவித்துள்ளது தமிழக அரசு.

நடிகர்களில் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரசன்னா, ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், ஸ்ரீகாந்த், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, பொன்வண்ணன், பிரபுதேவா, சரவணன், பாண்டு, சந்தானம், டி.பி.கஜேந்திரன், பி.ராஜு, ஆர்.ராஜசேகர், சிங்கமுத்து ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நடிகைகளில் குட்டி பத்மினி, நளினி, சாரதா, காஞ்சனா தேவி, டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி, பிரியாமணி ஆகியோர் விருது பெற உள்ளனர்.

நடன இயக்குநர்கள் புலியூர் சரோஜா, தாரா ஆகியோரின் பெயர்களும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பின்னணிப் பாடகர்கள் சசி ரேகா, கானா உலகநாதன், கிருஷ்ணராஜ், மாலதி, கானா பாலா, உன்னி மேனன் ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆடை வடிவமைப்பாளர் காசி, ஒளிப்பதிவாளர்கள் பாபு என்கிற ஆனந்த கிருஷ்ணன், ரத்தினவேலு, ரவிவர்மன் ஆகியோர் விருது பெறவுள்ளனர்.

இயக்குநர்கள் சித்ரா லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா, பவித்ரன், ஹரி ஆகியோர் பெயர்களும் கலைமாமணி விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், கலைஞானம், புகைப்படக் கலைஞர்கள் ஸ்டில்ஸ் ரவி, சேஷாத்ரி நாதன் சுகுமாரன் ஆகியோர் கலைமாமணி விருது பெறவுள்ளனர். கலைமாமணி விருது பெறுவோருக்குப் பாராட்டுப் பத்திரத்தோடு ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்படும்.

இவை தவிர, கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு பாரதி விருதும், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.