சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது.

‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் பட வெளியீட்டுக்கு முன் படக்குழுவினர், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதன் போது படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா, தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வர், நடிகர்கள் நிஹால், பரத் போப்பண்ணா, தமிழ் பதிப்பின் வசனம் மற்றும் பாடல்களை எழுதிய மதுரகவி, படத்தொகுப்பாளர் ஹேமந்த், படத்தை வெளியிடும் யூ எஃப் ஓ பிரதிநிதி மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் இயக்குநர் ரிஷிகா சர்மா பேசுகையில், ” கன்னட திரை உலகில் தயாராகி இருக்கும் முதல் சுயசரிதை திரைப்படம். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் பணிகள், ஒரு கன்னட திரைப்படமாகத் தான் தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, படப்பிடிப்பை பார்வையிட்ட திரையுலக பிரபலங்கள், இந்த திரைப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாக உருவாக்கலாமே..! என ஆலோசனை வழங்கினர். அதன் பிறகு தயாரிப்பாளரின் சம்மதத்துடன் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படமாக தயாரானது. ‘விஜயானந்த்’ படத்தின் டீசர் வெளியான பிறகு, மும்பையில் உள்ள முன்னணி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இதனை இந்தியில் வெளியிடலாமே..! என்றனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பிறகு பல நாடுகளிலிருந்து இந்தப் படத்தை இங்கும் வெளியிடலாமே..! எனக் கேட்டனர். இதனால் தற்போது ‘விஜயானந்த்’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஊக்கமளிக்கும் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் நிஜ கதாநாயகன் தொழிலதிபர் பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வர் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண பெண்மணியான என்மீது நம்பிக்கை வைத்து, இது போன்ற பிரம்மாண்டமான படைப்பை உருவாக்க வாய்ப்பளித்த வி ஆர் எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ஆனந்த் சங்கேஸ்வருக்கும் நன்றி.

“சினிமா என்பது கலை. வியாபராமல்ல” நாயகன் நிஹால்.

Leave a Reply

Your email address will not be published.