விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. மலையின் அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் நடந்து செல்லும் காலம் முதல் ரோடு போட்டு வாகனங்கள் செல்லும் காலம் வரைக்கும் இடையேயான சம்பவங்களை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி.

மேற்குத் தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் இருந்து தினந்தோறும் சுமை கொண்டு செல்லும் தொழிலாளி ரங்கசாமி தான் இந்த படத்தின் ஹீரோ. கூலி ஒருபக்கம் இருந்தாலும் மலைப்பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் இவரது குறிக்கோள். இவ்வாறு வந்த சம்பாத்தியத்தில் சிறுக சிறுக சேமித்து ஒரு சொந்த நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது ரங்கசாமியின் கனவு. ஒருவழியாக பணம் சேர்த்து நிலம் வாங்க முயலும்போது திடீரென நிலத்தின் உரிமையாளரின் உறவினர்கள் தகராறு செய்யவே பத்திரப்பதிவு நின்றுவிடுகிறது. அதன் பின்னர் அம்மாவின் பேச்சை தட்டாமல் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் ரெங்கசாமி, அதே பகுதியை சேர்ந்த ஒரு பாட்டியின் நிலத்தை வாங்க முடிவு செய்கிறார். அந்த நேரத்தில்தான் திடீரென தான் சேர்த்து வைத்த மொத்த பணம் பறிபோகிறது. இருப்பினும் அந்த ஊரில் உள்ள நல்லவர் ஒருவர் ரெங்கசாமிக்கு நிலம் வாங்க உதவி செய்கிறார்.
இந்த நிலையில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் ரங்கசாமியின் வாழ்க்கையில் திடீரென ஏற்படும் திருப்பங்கள், எதிர்பாராமல் ஒரு கொலை குற்றத்தில் சிக்கி சிறைக்கு செல்கிறான். சிறையில் இருந்து வந்த பிறகு அவன் வாழ்க்கையில் முன்னேறினான அல்லது தோற்றான எப்பதே மீதிக் கதை.
ரங்கசாமியாக நடித்திருக்கும் அந்தோணி, இந்த படத்தில் நடித்தார் என்று சொல்வதைவிட வாழ்ந்தார் என்று சொல்வது தான் உண்மையாக இருக்கும். அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி மற்றும் இந்த படத்தில் உள்ள அனைவரும் நடிப்பு முதல் வசன உச்சரிப்பு வரை எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் மிக இயல்பாக நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தனது பின்னணி இசை மூலம் உயிர் கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. மூன்றே பாடல்கள் என்றாலும் மூன்றும் முத்தான பாடல்கள்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். மேற்குத்தொடர்ச்சிமலையின் அழகை இதைவிட யாராலும் படம் பிடிக்க முடியாது.
கிராம மக்களிடம் உள்ள வெள்ளேந்தியான மனம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம், ஆகியவற்றை மிக இயல்பான வசனங்களின் மூலம் விளக்கியுள்ளார். இயக்குனர். இந்த படத்தை தயாரித்துள்ளவர் நடிகர் விஜய்சேதுபதி. இப்படி ஒரு அருமையான படத்தை உருவாக்க காரணமாக இருந்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

Leave a Reply

Your email address will not be published.