வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா மற்றும் ஆனந்த ஜோதி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஹரீஷ் பெராடி, ஷிவானி, ஜி பி முத்து, அருவி மதன், ஆதிரா, திலீப்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பம்பர்’

தூத்துக்குடியில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டு, வேலை செய்து வருகிறார். இந்நிலையில்  நாயகன் வெற்றி காவல்துறைக்குப் பயந்து சபரிமலைக்கு மாலை போடுகிறார்.அப்போது கேரளப் பகுதியில் லாட்டரி விற்கும் ஹரிஷ் பெராடி மீது இரக்கப்பட்டு அவரிடம் இருந்து  பம்பர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். அந்த லாட்டரியை அங்கேயே மறந்துபோட்டுவிட்டு ஊர் வந்துவிடுகிறார். அதை ஹரிஷ் பேரடி எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் முதல் பரிசு விழுகிறது. பணத்தை கைப்பற்ற ஹரிஷ் பேரடியின் குடும்பம் முயல, நேர்மையான ஹரிஷ் பேரடி அதை வெற்றியிடம் கொண்டு குடுக்க அவரை தேடி தூத்துக்குடி செல்கிறார். இறுதியில் வெற்றியை கண்டுபிடித்து லாட்டரியை கொடுத்தாரா?  இல்லையா? என்பதே ‘பம்பர்’  படத்தின் மீதிக்கதை.

நாயகன் வெற்றி, ரவுடி கதாபாத்திரத்திற்கு  பொருத்தமாக இருக்கிறார். ஆடல் பாடல் கொண்டாட்டமாகத் திரியும் அவர் பணமில்லாமல் அவமானப்படும் காட்சிகளில் நன்றாக நடித்து  அனைவரின் மனதையும் கவர்கிறார். நண்பர்களாக தங்கதுரை, திலீப் ஆகியோரின் நடிப்பு அருமை. ஜிபி.முத்து சிரிக்க வைக்க முயல்கிறார்.

படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றும் ஹரீஷ் பெராடி இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நேர்மையான இஸ்லாமியரை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார். அவரது மேக்கப் அட்டகாசம். நிச்சயம் இவருக்கு விருதுகள் வரலாம். தனது குடும்பத்தில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் இந்த பணம் நம்முடையது அல்ல அதை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்று நாயகனை தேடி அழையும் இடத்தில் கைதட்டல் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஷிவானி நாராயணன் இருக்கிற இடத்துக்குக் கொஞ்சம் அதிகமானவராக இருக்கிறார்.அவருடைய அழகும் பொறுமையும் அவருக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கின்றன.காவல்துறையின் தலைமைக்காவலர் வேடத்தில் கவிதாபாரதி கலக்குகிறார்

கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை அளவாக அமைந்து படத்துக்கு துணை நிற்கிறார்..வினோத்ரத்தினசாமியின் ஒளிப்பதிவில் தூத்துக்குடி மற்றும் கேரளாவை அழகாக படமாக்கியுள்ளார்.

இயக்குனர் செல்வகுமார் தமது முதல் படத்திலேயே நேர்மையும் உண்மையும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தியுள்ளார். இப்படத்தினை  ரசிகர்கள், நிச்சயம் கொண்டாடுவார்கள்.

மொத்தத்தில் ‘பம்பர்’   வெற்றியை நோக்கி

மதிப்பீடு : 4 / 5

நடிகர்கள் : வெற்றி, ஹரீஷ் பெராடி, ஷிவானி, ஜி பி முத்து, அருவி மதன், ஆதிரா,

இசை :   கோவிந்த்வசந்தா

இயக்கம் : செல்வகுமார்

மக்கள் தொடர்பு  : நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.